செல்லப் பிராணிகள்

எவர் செல்லப் பிராணிகளை வைத்திருக்கிறாரோ அவர் பலவித விதிகளைப் பின்பற்ற வேண்டும். சில மிருக வகைகளை எல்லாக் குடியிருப்புகளிலும் வைத்திருக்க முடியாது. நாய்களின் உரிமையாளர்கள் நாய்களுக்காக வரி செலுத்த வேண்டும்.

செல்லப் பிராணிகளை வளர்த்தல்

வாடகை குடியிருப்பில் வசிக்கும் எவரும் பொதுவாக கினிப் பன்றிகள், வெள்ளெலிகள், கேனரிகள் அல்லது மீன்கள் போன்ற சிறிய விலங்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பெரிய விலங்குகளை (பூனைகள் அல்லது சிறிய நாய்கள் உட்பட) வளர்ப்பது வாடகை ஒப்பந்தத்தில் தடைசெய்யப்படலாம். சத்தத்தை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தான விலங்குகளையும் வீட்டு உரிமையாளர்கள் தடை செய்யலாம். மேலும், செல்லப் பிராணி உரிமையாளர்கள் விலங்கு நலச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சில விலங்குகளை (முயல்கள் போன்றவை) தனியாக வைத்திருக்கக்கூடாது. கூண்டு அளவு மற்றும் உபகரணங்களுக்கான குறைந்தபட்ச தேவைகளும் உள்ளன. பல விலங்குகளை (அயல்நாட்டு விலங்குகள்) சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யவே அனுமதிக்கப்படுவதில்லை. மற்றவற்றுக்கு கால்நடை அலுவலகத்திலிருந்து சிறப்பு அனுமதி தேவை.

நாய்கள்

அப்பென்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்தில் நாய்களுக்கு விசேட சட்டமுண்டு. அதனுள் நாய் வளர்ப்பவர்களுக்கு என்ன பொறுப்புகள் உண்டு என எழுதப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை மிருக வைத்தியரிடம் அறிந்து கொள்ளலாம்.

  • சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து நாய்களும் மைக்ரோசிப் செய்யப்பட்டு ஒரு தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். நாய்களுக்கு ஒரு நாய் பாஸ்போர்ட் (கிரெடிட் கார்டு வடிவம்) கிடைக்கும். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள நாடுகளுக்கு விலங்குடன் பயணம் செய்யும்போது தேவைப்படும் செல்லப் பிராணி பாஸ்போர்ட்டைப் போன்றது அல்ல.
  • நாய்களைக் மாநகராட்சியில் பதிய வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் வருடத்திற்கொரு முறை நாய்வரி கட்ட வேண்டும்.
  • நாயை வளர்ப்பவர் அதன் மலத்தை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். யார் இதைச் செய்யாமல் விட்டாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.