சுவிஸ் பற்றி

ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலாச்சாரத் தனித்தன்மை இருக்கும். அது போலவே சுவிட்ஸர்லாந்திற்கும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒருசில எழுதாச் சட்டங்கள் உண்டு.

பல்வேறுபட்ட கலாச்சாரங்கள்

சுவிட்சர்லாந்து ஒரு வண்ணமயமான கலாச்சாரக் கலவையான நாடு. குறிப்பாக நான்கு தேசிய மொழிகளைக் கொண்டது. அதனால் வெவ்வேறு மாநிலங்களின் எண்ணங்கள் வெவ்வேறாக இருப்பதுபற்றி ஆச்சரியப்படவேண்டியதில்லை. டொச்சுவிஸ் பிரதேச கலாச்சாரம் பிரான்ஸ் சுவிஸ்பிரதேச கலாச்சாரத்துடன் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அத்துடன் நகர மற்றும் கிராமப்புறங்களுக்கிடையிலம் பெரிய வித்தியாசம் இருக்கும். எனினும் அவற்றிற்கிடையில் சிறிதளவு ஒற்றுமையும் சேர்ந்து இருக்கும்.

வணக்கம் தெரிவித்தல்

சுவிட்சர்லாந்தில் மக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே கூட, கைகுலுக்கி, கண்களை நேராகப் பார்த்து வாழ்த்துகின்றனர். வழக்கமான வாழ்த்து "க்ரூஸி" ("Grüezi") (நண்பர்களிடையே, "ஹலோ" அல்லது "ஹோய்" போன்ற பிற வாழ்த்துக்களும் உள்ளன) ஆகும். கிராமப் புறங்களில், பாதையில் செல்பவர்கள், அவர்களைத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்வார்கள். "நன்றி" மற்றும் "தயவுசெய்து" என்ற சொற்றொடர்களும் முக்கியமானவை: எடுத்துக்காட்டாக, கடைகள் அல்லது உணவகங்களில் "நன்றி" மற்றும் "தயவுசெய்து" என்று பல முறை சொல்வது கிட்டத்தட்ட ஒரு சம்பிரதாயமாகும்.

நேரம் தவறாமை

சுவிஸ் நாட்டில் பிரபலமான நேரந்தவறாமை என்பது வெறும் ஒரு பழக்கம் அல்ல. ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வரப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே அழைக்க வேண்டும். பணியிடத்தில் நேரந்தவறாமை மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒருவரைச் சந்திக்க விரும்பினால், வழக்கமாக முன்கூட்டியே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தனியார் அமைப்புகளில் அறிவிக்கப்படாத வருகைகள் வழக்கமான முறையில் இடம்பெறுவதில்லை.

மறைமுகத் தொடர்பாடல்

சுவிஸில் சங்கடமான விடயங்களை அதிகமாக மறைமுகமாகத்தான் சொல்லுவார்கள். பேசுபவர் விமர்சனங்களை மறைமுகமாக அல்லது பெரிய சொற்றொடர்களுக்கிடையில் மறைத்துப் பேசுவார். எவ்வாறாயினும் தன் விமர்சனங்கள் பாரதூரமானதாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என அவர் எதிர்பார்ப்பார். சரியாக ஜேர்மன் மொழி பேசத் தெரியாதவர்கள் இதைப் புரிந்து கொள்வது இலகுவான விடயமல்ல. மன உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால், அச்சந்தர்ப்பங்களில் நேரடியான பேச்சுக்கள் அக்குழப்பமான நிலையை தவிர்க்க உதவும். உதாரணமாக தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக  சிலவேளைகளில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வருதல். தெளிவில்லாத பிரச்சினையாயின் குறைவான கேள்விகளைக் கேட்பதை விட அதிகமாகக் கேள்விகள் கேட்டபது எப்போதும் நலமானதாகும்.