பிள்ளைகள் பராமரிப்பு

குழந்தை பிறந்த பின்பு அநேகமாகத் தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். அதற்காகத்தான் அப்பென்செல் அவுசர்ரோடன் மாநிலத்தில் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் உள்ளன. இது கட்டணச்சேவையாகும்.

குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம்

பகல் நேரம் முழுவதும் குழந்தைகளைப் பராமரிப்பது குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் (Kitas, Kinderkrippen). இங்கு 3 மாதம் தொடக்கம் பாடசாலை வரையுள்ள பிள்ளைகள் பராமரிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகங்கள் பள்ளி வயதுடைய பிள்ளைகளையும் (பாடசாலைக்கு முன்னும் பின்னும் மற்றும் மதியமும்) பராமரிக்கின்றன. இங்கு இடம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருப்பதால் பெற்றோர் இயலுமானவரை முன்கூட்டியே பதிய வேண்டும். இதற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசப்படும், மேலும் அதன் ஒரு பகுதியை கண்டோனும் மற்றும் வதியும் கிராமசபையும் பொறுப்பேற்கின்றன. குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் அல்லது அப்பென்செல் அவுசர்ரோடன் சமூக பாதுகாப்பு அலுவலகம் இங்கு பதியும் வசதிகளையும் கட்டணத்தையும் அறியத் தரும்.

விளையாட்டுக் குழுக்கள்

அதிகமான பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முன்பு விளையாட்டுக் குழுக்களுக்குச் (Spielgruppe) செல்கின்றனர். கிட்டத்தட்ட 3 வயதையடைந்த பிள்ளைகள் சேர்ந்துஇ பெற்றோரின்றி ஒரு நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பாளரின் கண்காணிப்புடன், விளையாடுதல் மற்றும் கைப்பணி போன்றவற்றைச் செய்வர். விளையாட்டுக்குழுக்களுக்குச் செல்லுதல் அவரவர் விருப்பத்திற்குரியது. வீட்டிலே டொச் மொழி பேசாத பிள்ளைகள் விளையாட்டுக்குழுக்களுக்குச் செல்லும்போது , அங்கு டொச் மொழித் தொடர்புக்கு நல்ல வாய்ப்பாகிறது. அதனால் பாடசாலைக்குச் செல்லும்போது இலகுவாகிறது. ஒவ்வொரு விளையாட்டுக்குழுக்களுக்கும் உரிய கட்டணங்கள் வித்தியாசப்படுவது மட்டுமன்றி இதன் ஒரு பகுதியை கிராமசபை செலுத்தும். அதிகமாக எல்லாக் கிராமசபைகளிலும் விளையாட்டுக்குழுக்கள் இருப்பது மட்டுமன்றி, இதற்குரிய கட்டணம், விண்ணப்ப வசதிகள் பற்றிக் கிராமசபை அறியத்தரும்

நாள் கட்டமைப்பு / மதிய உணவு

பாடங்கள் இல்லாத நேரங்களிலும் கூடச் சில நகராட்சிகளில் சில பாடசாலைகள் பராமரிப்பை வழங்குகின்றன. பாடசாலைகளில் நாள் கட்டமைப்பின்படி (Tagesstruktur) பிள்ளைகள் மதிய உணவைப் பாடசாலையில் உண்டு மதியம் பாடசாலையில் தங்கலாம். பாடசாலை முடிய வீட்டுப்பாடங்கள் செய்ய உதவி செய்வார்கள். இந்தச் சலுகைக்குப் பெற்றோரிடம் கட்டணம் அறவிடப்படும். கட்டணங்கள் பெரும்பாலும் பெற்றோர்களின் வருமானம் மற்றும் வேலை நிலையைப் பொருத்து மாறுபடும். பிள்ளை இச் சலுகையை ஒன்று அல்லது மேற்பட்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். நாள் கட்டமைப்பு தினப்பள்ளியிலிருந்து (Tagesschulen) வேறுபடும். தினப்பள்ளியில் பிள்ளைகள் வாரத்தில் 5 நாட்களும் ஒரே மாதிரி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்ற வேண்டும்.

பராமரிப்புக்குடும்பம்

பிள்ளைகளைப் பகலில் குறிப்பிட்ட நேரத்திற்குப் (அதிகமாகப் பகல் முழுவதும்) பொறுப்பெடுக்கும் குடும்பங்கள் (Tagesfamilien) பராமரிப்புக்குடும்பம் எனப்படும். இந்த குழந்தைகளைப் பராமரிக்கும் வசதி தொழில் புரியும் பெற்றோருக்குத் தேவையானது. அப்பென்செல் அவுசெர்ரோடனில், நாள் குடும்பங்கள் சங்கம் வழங்கை பற்றிய தகவல்களை வழங்குகிறது.