மதம்

சுவிஸ் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ நாடு. ஆயினும் இன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த அதிக மக்கள் சுவிஸில் வாழுகிறார்கள். மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அரச பள்ளிகள் மதச் சார்பற்றவையாக உள்ளன.

மதமும் அரசும்

சுவிஸ் பாரம்பரியமான கிறிஸ்தவ நாடாகும். மாநிலங்களே மதத்துக்கும் மாநிலத்திற்கும் இடையிலான தொடர்புகளை தீர்மானிக்கும். அப்பன்செல் அவ்சர்ஹோடன் உட்பட பெரும்பாலான ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்களில், கிறிஸ்தவ சமயச் சமுதாயங்கள் அரச நிறுவனங்களாக (அரச தேவாலயங்கள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் கருத்து மாநிலம் இவற்றிற்கு குறிப்பிட்ட உரிமைகளைக் கொடுத்துள்ளது என்பதாகும். இதன்மூலம் உதாரணமாக தமது அங்கத்தவரிடமிருந்து வரியைப் பெற்றுக்கொள்ளலாம். அப்பன்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்தில் றோமன் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மற்றும் கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்கள் அரச தேவாலயங்களாக உள்ளன.

அப்பன்செல் அவ்சர்ஹோடனில் மதம்

சொந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதச் சமுதாயங்கள் (அரச தேவாலயங்கள்) தவிர, அப்பன்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல்வேறு மத சமுதாயங்கள் உள்ளன. அப்பன்செல் அவ்சர்ஹோடன் மாநிலம் புரட்டஸ்தாந்து மதத்தை பிரதான மதமாகக் கொண்டுள்ளது.

மதச் சுதந்திரம்

சுவிசின் அரசியலமைப்பு மதச் சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. ஓவ்வொருவருக்கும் தமது சொந்த மதத்தை பேணவும், வெளிப்படுத்தவும் அதைப் பரப்பவும் உரிமையுள்ளது. மதத்தில் இணைவதற்கும், மதச் செயற்பாடுகளில் பங்கொடுக்கவும் எவரையும் நிர்ப்பந்திக்க முடியாது. மக்கள் ஒன்றாகக்கூடி தமது சமய வழிபாடுகளை கொண்டாட முடியும். எவருக்கும் அவரது மதம் அல்லது நம்பிக்கையின் காரணமாக பாகுபாடு காட்டப்படக் கூடாது.

மதமும் பள்ளியும்

கட்டாயக் கல்வி மதச்சார்பற்றது. அதன் அர்த்தம் பாடத்திட்டத்தில் சமய பாடம் சேர்க்கப்படவில்லை என்பதல்ல.  தேவாலயங்களால் சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கப்படும் சமயக் கல்வி, பள்ளியை அடிப்படையாகக் கொண்ட "ஒழுக்கநெறி மற்றும் சமயங்கள்" பாடநெறி என இரு வகையான சமயக் கல்விகள் உள்ளன. இந்தப் பாடம் அனைத்து மனிதர்களையும் பாதிக்கும் சமய மற்றும் ஒழுக்கம் சார் கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கின்றது. அது தொடக்கப் பள்ளியிலும் இடைநிலைப் பள்ளியின் முதலாம் ஆண்டிலும் ஒரு கட்டாய பாடமாகும். அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்களால் சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் கற்பிக்கப்படும் சமயக் கல்வி பங்கேற்பது தன்னார்த்துக்குரியதாகும். ஏனைய மதங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, சமயச் சமுதாயங்கள் சிலபோது பள்ளிக்கு வெளியே சமயக் கல்வியை வழங்குகின்றன.